செய்தி
(2ம் இணைப்பு)
Audio
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் - மாவீரர்நாள் அறிக்கை 2011
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 01:33.42 PM GMT ]
தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27/11/ 2011.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.

காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.

நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும்.

எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றார்கள். கொடிய எதிரிகளினது வல்வளைப்பினையும் கூட்டுச்சதிகளையும் எதிர்த்த பேராயுதங்களாக இருக்கின்றார்கள். எம்மினத்தின் இருப்பிற்கும் எமது இலட்சியப் பயணத்திற்கும் இயங்கு பொருளாக எம்முள்ளே வாழ்கின்றார்கள்.

இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இனமானத்தால் உந்தப்பட்டு, உலகெலாம் பரவி வாழும் தமிழர்களாகிய நாம் இந்நாளில் எங்கள் சத்தியவேள்வியின் நாயகர்களைத் தலைவணங்கிப் பூசிக்கின்றோம்.

எமது வீரமறவர்களை வணங்குகின்ற இப்புனித நாளில் அவர்களைப் பெற்றெடுத்து தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக உவந்தளித்த பெற்றோர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் எங்கள் மனங்களில் நிறுத்திப் போற்றுகின்றோம்.

தமிழர் தாயகத்தில் எமது காவல் தெய்வங்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எவையும் வெளிப்படையாக நடாத்த முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்களைத் துடைத்தழித்து, மக்களை இரும்புப்பிடிக்குள் வைத்திருப்பதனூடாக மாவீரர் நினைவுளை அழித்துவிட முடியுமென்று சிங்கள தேசம் கனவு காண்கின்றது. தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் பேரெழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் எமது மக்களின் விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என்பதை இந்நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன..

அன்புக்குரிய தமிழ் மக்களே,

இன்று சிங்கள தேசம் எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்துவிட்டதாக எண்ணி அந்த மமதையில் மூழ்கிப்போய் நிற்கின்றது. ஆண்டாண்டு காலமாக தம் சொந்த நிலத்தில் வாழ்ந்த எம்மக்களைத் தமது நிரந்தர அடிமைகள்போல் நடாத்தி வருகின்றது. போர் முடிந்து விட்டதாகவும் இனி பொருளாதார அபிவிருத்திதான் முக்கியம் எனவும் கூறிவருகின்ற மகிந்த தலைமையிலான சிங்கள அரசாங்கம், இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து சிங்கள தேசத்தினை மட்டும் செழிப்புறச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்களுக்கும் அபிவிருத்தி என்ற மாயையினை உருவாக்கி அதன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளுவதுடன் தமிழர் தாயகம் மீதான தொடர் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை இருட்டடிப்புச் செய்யும் நாசகார வேலைகளையும் செய்துவருகின்றது.

பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற வகையில் தமிழர்களின், நில, பொருளாதார, சமூக, பண்பாட்டு நெறிமுறைகளுக்கு ஒத்திசைவற்ற பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் இதன் மூலம் தமிழர் நிலங்களைப் பொருளாதார வலயம் எனவும், தொல்லியல் வலயம் எனவும் பிரகடனம் செய்து அபகரித்து வருகின்றது. இந்த நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் அடியோடு விரட்டப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டகாலமாகவே தென்தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயக நிலங்களை விழுங்கும் நடவடிக்கைகளும் தற்போது இன்னும் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதிகளில் போர்முடிவடைந்து விட்டதாகச் சிங்கள அரசு கூறி ஐந்து வருடங்கள் கடந்தநிலையிலும் இன்னும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவற்றைவிட சம்பூர் போன்ற எமது மக்களின் பூர்வீக நிலப்பகுதிகள் நிரந்தரமாகவே அபகரிக்கப்பட்டுள்ளன. தனியே தமிழருடைய நிலங்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களின் நிலங்களும் தென்தமிழீழத்தில் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடானது, ‘சிறிலங்காவானது சிங்கள பெளத்த மக்களுக்கே’ என்ற பேரினவாதக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதாக அமைகின்றது.

நல்லிணக்கம் என்ற நாசகாரத் திட்டத்தின்கீழ் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நாள்தோறும் முளைக்கின்றன. கூடவே படை முகாம்களும் பெளத்த கோயில்களும் பெருகிவருகின்றன. சிங்கள அரசாங்கத்தின் குடியேற்றங்களும், பெளத்த கோயில்களும், படைகளின் இருப்புக்களும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பின் அடையாளங்களே என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளதுடன் அதனை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

தமிழர் தாயக எல்லைப்பகுதியில் இருக்கும் சிங்களக் கிராமங்களை இணைப்பதன் மூலமும், தமிழர் பிரதேசங்களில் சிங்கள இனத்தவரைக் குடியேற்றுவதன் மூலமும் தமிழ் மக்களின் குடிப்பரம்பலில் மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் ஆட்புல பலத்தினையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தினையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது சிங்கள அரசு. இடம்பெயர்ந்த மக்கள் முழுவதுமாகத் தமது சொந்த இடங்களிற்குத் திரும்புவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குடிசன மதிப்பீட்டை மேற்கொண்டு அதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது மகிந்த அரசாங்கம்.

ஒருபுறம் நில ஆக்கிரமிப்பினை மிக இலாவகமாகச் செய்துகொண்டிருக்கும் சிங்கள அரசாங்கமானது மறுவளமாக தமிழ் மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் சுயபொருளாதாரக் கட்டமைப்புடன் நிம்மதியாக வாழ முடியாதவாறு அச்சுறுத்தி வருகின்றது. தமிழ் மக்கள் எப்போதுமே தமது அன்றாடக் கடமைகளிற்குக்கூட சிங்கள தேசத்தில் தங்கி இருக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே அனைத்து வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. வீடுவீடாகச் சோதனைகளை மேற்கொள்ளல், ஆட்பதிவுகள், காணிப்பதிவுகளை மேற்கொள்ளல், மீன்பிடிப்பதற்கான அனுமதி, பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று கூடுவதற்கான அனுமதிகளை நடைமுறைப்படுத்தல் என நாளாந்தம் எமது மக்கள் சிங்கள ஆயுதப்படைகளிடம் தங்கி இருக்கவேண்டிய சூழல் தொடர்கின்றது.

இந்த நெருக்கடிகளை மீறி மக்கள் குரல்கொடுக்கும் போதெல்லாம் அவர்கள் சிங்கள ஆயுதப்படைகளினால் அல்லது அவர்களின் கைக்கூலிகளால் தண்டிக்கப்படுகின்றனர். கிறிஸ் பூதம் என்றும், கொள்ளையர்கள் என்றும், இனந்தெரியாத நபர்கள் என்றும் சிறிலங்காப்படைகளின் ஒட்டுக்குழுக்கள் மக்கள் மீது தாக்குதல்களை நடாத்திவருகின்றன. படையினரின் சோதனைச்சாவடிகளிற்கு அண்மையில் பட்டப்பகலில் பல்கலைக்கழக மாணவர்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றார்கள்.

அனைத்துலகத்தின் அழுத்தத்தினைத் தணிக்க அவசரகாலச் சட்டத்தினைத் தளர்த்தி, அதற்குச் சமமான பிறிதொரு அடக்குமுறைச் சட்டத்தை உருவாக்கி தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றது சிங்களப் பேரினவாத அரசு. கைதுகள், காணாமற்போதல்கள் தொடர்கின்றன. விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போராளிகளைக் கைதுசெய்தல், அவர்களை மீளவும் பதிவு செய்தல், இராணுவ முகாம்களுக்கு அழைத்து விசாரணை செய்தல், சித்திரவதை செய்தல் ஆகியன தொடர்கின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும் சிங்களப்படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளை எந்தப்பதிவிற்கும் உட்படுத்தப்படாமல் நூற்றுக்கணக்கான போராளிகளும், தமிழ் இளையோர்களும் சிங்களப்படைகளின் இரகசிய சித்திரவதைக் கூடங்களில் துன்புறுத்தப்பட்டுக் கட்டங்கட்டமாகக் கொல்லப்படுகின்றார்கள். இந்நடவடிக்கைகள் எல்லாமே ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் நன்கு தெரியும். பலர் இதனை வெளிக்கொண்டும் வந்திருக்கின்றார்கள். ஆனால் மகிந்த அரசாங்கத்தின் இந்த அத்துமீறல்கள் எல்லாம் வரையறை இன்றி, எந்த மாற்றமும் இன்றி, எந்த அச்சமோ அழுத்தமோ இன்றித் தொடர்கின்றன.

காலங்காலமாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களை அவர்களின் தாயக பூமியில் இருந்து கருவறுக்கும் நீண்டகாலத்திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டுவந்துள்ளன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, கலாச்சார உரிமைகளையும், விழுமியங்களையும் மறுதலித்துவரும் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் மகுடமாகவே மகிந்த இராஜபக்‌ஷ அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.

தமிழர்களின் தனித்துவத்தையும், தாயகக் கோட்பாட்டினையும் மறுக்கும் சிங்கள தேசம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி மீண்டுமொரு பேச்சுவார்த்தை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கண்துடைப்பிற்குக்கூட தமிழர்களுக்கு எதனையும் வழங்க முன்வராத சிங்கள அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைகள் வெறும் காலங்கடத்தலே ஆகும் என்பதனைத் தமிழ்மக்கள் நன்கு அறிவர்.

அன்பான தமிழ்பேசும் மக்களே,

மகிந்த இராஜபக்‌ஷ தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் தமிழ்மக்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளுக்கும், நாளாந்த மனித உரிமை மீறல்களுக்கும் தைரியம் ஊட்டும் காரணியாக இருப்பது தமிழ்மக்கள் பலம் இழந்துள்ளார்கள் என்பதே ஆகும். மகிந்த இராஜபக்‌ஷவிற்கு இச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்த அனைத்துலகச் சமூகம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னருங்கூட மிக நீண்ட அமைதியினையும் அலட்சியப்போக்கினையும் கொண்டிருப்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

அனைத்துலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கடந்த ஈராண்டுகளாக பல அழுத்தங்களை மேற்கொண்டுவருவதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அந்த அழுத்தங்களை மேற்கொள்ளும் நாடுகள், நாடுசாரா அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒத்திசைவற்ற தன்மை காணப்படுகின்றது. கால வரம்பற்ற, மாறுபடும் நோக்கங்களைக் கொண்ட இந்த அழுத்தங்களும் நடவடிக்கைகளுமே சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்கு வலுச்சேர்ப்பவையாக உள்ளன. அனைத்துலகச் சமூகத்தின் இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட மென்போக்கு சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்பினை நிறுத்தப்போவதில்லை; தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இறையாண்மையினைக் கொடுக்கப்போவதும் இல்லை என்பதே உண்மை.

நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நலன்களைப் பேணும் பூகோள அரசியலைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். இப்பன்னாட்டு நலன்சார் அரசியற்போக்கைப் புறக்கணிக்கும் நோக்கமோ அல்லது அவற்றுடன் ஒத்திசையாமற் பயணிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது.

ஆனாலும், எம்மக்கள் மீதான இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தவேண்டும்; எம் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்; அனைத்துலகத்தின் பாதுகாப்புடன் கூடிய, எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் தீர்வு ஒன்றை நோக்கி நகரவேண்டும் என்பதே எமக்கு முன்னுரிமையாக உள்ளது. இந்த வகையில்தான் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் பணிகள் மற்றும் ஊடகங்களின் பணிகளை நாம் வரவேற்கின்றோம். தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகளை காலம் சென்றாவது உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பன்னாட்டு ஊடகங்களின் பணியினை எமதுமக்கள் நன்றி உணர்வுடன் நோக்குகின்றார்கள்.

அனைத்துலகச் சமூகத்தின் தமிழ்மக்கள் மீதான அக்கறைகளுக்கும், அவர்களுக்கான நியாயமான உரிமைகளை நீதியின் அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் எமது அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது. மேலும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயக முன்னெடுப்புக்களை நாம் வரவேற்பதோடு அவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்தே வருகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் நாம் உறுதியளித்ததற்கு அமைய இன்றுவரை எமது ஆயுதங்களை மெளனித்து வந்துள்ளோம். நாம் தற்போது எமது மக்களின், போராளிகளின் நலன்கள், உரிமைகள், அரசியல் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகின்றோம். அனைத்துலகச் சமூகத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும் தமிழ்மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருக்குமென்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்தும் எமது உறுதிமொழியைக் கடைப்பிடித்து வருகின்றோம். இந்நிலையில் எமது மக்களின் பாதுகாப்பும் அவர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் பொறுப்பும் இந்த அனைத்துலகச் சமூகத்திடமே உள்ளது. .அதேவேளை சிறிலங்கா பேரினவாத அரசாங்கம் எமது மக்கள் மீதான தொடர் ஆக்கிரமிப்பினைச் செய்வதற்கு இந்தக் காலகட்டத்தினை நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது என்பதனை அனைத்துலகச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிரான எமது இனவிடுதலைப் போராட்டத்தை எமது மக்களோடு இணைந்து முன்னெடுப்பதற்கான வெளியை ஏற்படுத்த உலகநாடுகள் முன்வர வேண்டும். விடுதலைக்காகப் போராடும் எமது அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து ஒடுக்க முனைந்ததன் விளைவை இன்று உலகம் புரிந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது அமைப்பின் மீதான தடையை நீக்கி, நாம் வெளிப்படையாகவும் ஜனநாயகவழியிலும் போராட்டத்தை முன்னெடுக்க வழிசமைக்க வேண்டுமென இந்நேரத்தில் அனைத்துலகச் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதிகளின் கொடுங்கோல் ஆட்சியினால் தமிழர்கள் விரட்டப்பட்டு நீண்டகாலம் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, இராணுவ அச்சுறுத்தல்களிற்குள் வாழ்ந்து வருகின்றார்கள். இதன் விளைவாகவே வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் அகதித்தஞ்சம் கோரும் நிலை உருவானது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர்கள் அகதித்தஞ்சம் கோரும் நிலை அதிகரித்துள்ளது. உண்மையில் வெளிநாடுகளில் தஞ்சம் கோரிவரும் தமிழ் அகதிகளின் நிலையினை உலக நாடுகள் மனிதாபிமான ரீதியில் அணுகி அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். அகதித்தஞ்சம் கோருபவர்களின் பயணங்கள் வெளிநாடுகளைத் திட்டமிட்டுச் சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கங் கொண்டவையோ அல்லது பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டவையோ அல்ல. தமிழர்கள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக கெளரவமாக வாழும் நிலை இருப்பின் இப்படியான உயிராபத்து மிக்க புலப்பெயர்வுகள் நடைபெறா.

எமது இயக்கம் வெளிநாடுகளிற்கு எமது மக்களை அகதிகளாக அனுப்பும் நடவடிக்கைகளை எப்போதும் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தாயகத்தில் தமது சொந்தக் காலில் நின்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதனையே விரும்புகின்றது. அதற்காகவே எமது மாவீரர்கள் உயிரைக்கொடுத்துப் போராடினார்கள். எமது மக்கள் தமது பூர்வீக மண்ணிலேயே நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழ்வதற்கான அனைத்துச் சூழலையும் ஏற்படுத்த அனைத்துலகம் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பாகும்.

முள்ளிவாய்கால் பேரழிவுக்குப் பின்னரான எமது விடுதலைப் போராட்டம் தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பல்தன்மை வாய்ந்த, ஆயுதவழிமுறைகளற்ற ஒரு போராட்டமாகப் பரிணமித்துப் பயணிக்கின்றது. உலகம் முழுவதுமாக வாழ்ந்துவரும் தமிழ்மக்கள் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகப் பல்வேறு தளங்களில் போராட்டத்தினை முனைப்புடன் முன்னெடுக்கிறார்கள். போராட்டச் செயற்பாடுகளை எந்த அமைப்புக்கள் முன்னெடுத்தாலும் எமது அரசியல் உரிமையினை எமது தாயகவிடுதலைக்கான அடிப்படைகளைப் புறந்தள்ளாது உண்மையுடன் போராட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த அடிப்படையில் போராடும் அமைப்புக்களிற்கு நாம் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம்.

எமது தாயக விடுதலைக்கான அடிப்படைகளும் எமது அரசியல் உரிமைகளும் பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டவை என்பதனைத் தமிழ்மக்கள் நன்கு அறிவர். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறிலங்காவை பன்னாட்டுக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் போராட்டங்கள் எமது இலட்சியத்தைப் பேரம்பேசும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாதென்பதையும் எம்மக்கள் நன்கு அறிவர். ஆகவே இவற்றை அடிப்படையாக வைத்து தமிழர்களின் அரசியல் இலட்சியமாம் இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசை நோக்கிய போராட்ட நகர்வுகளை எமது மக்கள் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் சமகாலத்தில் தாயகத்தில் சிங்கள வல்வளைப்பினால் சின்னாபின்னமாகிப்போன எம் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குட் சிக்குப்படாமல் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அன்பான தமிழக உறவுகளே!

தமிழகத்தில் மாற்றம் பெற்றுள்ள அரசியற் சூழலால் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் எம் உறவுகள் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் நிலையும் எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நிலையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அனைவரும் கட்சி, அமைப்புப் பேதங்களின்றி ஒன்றிணைந்து காத்திரமான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடவேண்டுமென்பது எமது வேண்டுகோள். எமது மக்களின் உரிமைக்கான போராட்டம் பற்றியும் விடுதலைக்கான தேவை பற்றியும் அயல் மாநில மக்களுக்கும் புரியவைக்கவேண்டிய கடமை உங்களுக்கே உரித்தானது. தமிழீழ மக்களிற்கான விடுதலை என்பது இந்திய தேசத்தின் நலன்களுக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கோ இடையூறாக இருக்காது என்பதனை நாம் ஏற்கனவே பலதடவைகள் கூறியுள்ளோம். அதனை இந்திய தேசம் முழுவதும் எடுத்துச்சென்று எமது தேச விடுதலைக்காக உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களைச் சார்ந்துள்ளது.

அன்பான தமிழ்பேசும் மக்களே,

இன்று நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் நிற்கின்றோம். ஒருபக்கம் சிங்கள தேசம் எம்மக்களைத் தனது இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கி வைத்திருக்கின்றது. மறுபக்கம் பேச்சுவார்த்தை, அபிவிருத்தி, நல்லிணக்கம் என்று அனைத்துலகத்தினை ஏமாற்றிக்கொண்டு கால இழுத்தடிப்புக்களைச் செய்து அனைத்துலகச் சமூகத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றது. ஆனால் சிங்கள தேசத்தின் இச்சூழ்ச்சிகளையும் அச்சுறுத்தல்களையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொண்டு எமது தாயக மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள அரசுக்கு எதிரான தமது உணர்வுகளைத் தேர்தல் மூலமும் போராட்டங்கள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர் தாயகம் எந்தவொரு சூழலிலும் சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை என்பதனைத் திடமாகக் கூறிவருகின்றார்கள். இந்தத் தெளிவான, நம்பிக்கையான முடிவுகள் சர்வதேசத்தின் காதுகளை எட்டியுள்ளன. உலகத்தமிழர்கள் உலகத்திடம் நீதி வேண்டி நடாத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சிங்கள தேசத்தை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களின் உறுதியான விடுதலைப்பயணத்தினை நோக்கிய செயற்பாடுகளை அழிப்பதற்குச் சிங்கள தேசம் பல்வேறு மாயைகளையும், நயவஞ்சகத் திட்டங்களையும் மிரட்டல்களையும் மேற்கொண்டு வருகின்றது. எமது மக்களைப் பிளவுபடுத்தி, குழுமோதல்களை உருவாக்கி எமது ஒன்றுபட்ட பயணத்தைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவற்றுக்குத் தமிழ் மக்கள் அடிபணியாது எங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராட வேண்டும்.

இலட்சியத்தால் ஒன்றுபட்ட எம்மக்களை எந்தச் சக்தியாலும் வீழ்த்திவிட முடியாது. போராட்டப் பயணத்தில் சாவுகளையும் அழிவுகளையும் துன்பங்களையும் காலநீடிப்புக்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. எண்ணற்ற ஈகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் புரிந்து உலகமே வியக்கும் உன்னத போராட்டத்தை நடாத்திய நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. உயர்ந்த இலட்சியத்துக்காய் உயரிய தியாகங்களைப் புரிந்து போராடிக்கொண்டிருக்கும் எமக்கு ஆன்மபலமாக எமது மாவீரர்களே திகழ்கின்றார்கள்.

எமது மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு கட்டாந்தரையாக்கினாலும் அவர்கள் தமிழ்மக்களின் மனத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களையும் ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும் மனத்தில் நிறுத்தி நாம் தொடர்ந்து போராடுவோம். உலகில் தமிழரின் பெருமையைத் தமது ஈகத்தால் பதித்துச் சென்ற எமது வீரமறவர்களைப் பூசிக்கும் இந்தப் புனிதநாளில் அவர்களின் இலட்சியப்பாதையில் ஒற்றுமையாகப் பயணித்து எமது இறுதி இலட்சியத்தை வென்றெடுப்போமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 01-08-2014, 10:21.25 AM ]
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள் பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சில நாடுகளின் தூதுவர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
[ Friday, 01-08-2014, 09:54.49 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட அரச நிறுவனமான மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Friday, 01-08-2014, 09:38.34 AM ]
முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியானதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
[ Friday, 01-08-2014, 09:23.44 AM ]
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு.  இவருடைய 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 

 

[ Friday, 01-08-2014, 09:16.53 AM ]
இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.
[ Friday, 01-08-2014 11:04:25 GMT ]
பிறேசில் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுக்கு உணவளித்த சிறுவனை, அந்தப் புலி கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார்.  
[ Friday, 01-08-2014 08:05:46 GMT ]
ஆனைமலை அருகே சாலையோரம் குடிபோதையில் கிடந்த பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக முன்னாள் ஊர்காவல்படை வீரரை கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 01-08-2014 08:22:24 GMT ]
இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மோசமாக இருப்பதால் தவானுக்கு பதிலாக தொடக்க வீரராக கம்பீரை களமிறக்கலாம் என கங்குலி கூறியுள்ளார்.
[ Friday, 01-08-2014 08:17:19 GMT ]
Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியானது பலத்த வரவேற்பை பெறாத நிலையில் சம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Note 4 இனை அறிமுகம் செய்யவுள்ளது.
[ Friday, 01-08-2014 10:16:07 GMT ]
இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அமீர் கான் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 31-07-2014 16:09:43 ]
ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.